தமிழ் மக்களின் காவல் தெய்வங்களில் முக்கியமான ஆண் காவல் தெய்வம் பாவாடைராயன். தமிழக கிராம புறங்களில் மிகவும் கொண்டாடப்படும் தெய்வங்களில் குறிப்பிடத்தக்கது பாவாடைராயன். பார்வதியின் அவதாரமான அங்காளபரமேஸ்வரியின் மகனாக போற்றப்படும் தெய்வமும் இதுவே ஆகும். தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அங்காளபரமேஸ்வரி ஆலயங்களில் அன்னையின் மடியில் அமர்ந்திருக்கும் சிறப்பு பெற்ற ஒரே காவல் தெய்வம் பாவாடைராயன் மட்டுமே.
தொன்மம்
புராண காலத்தில் உலகை ஆளும் சக்தி தேவி, பார்வதியாக அவதாரம் எடுத்தார். அப்போது சிவபெருமானை போலவே படைப்பு கடவுளான பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் குழம்பிய பார்வதி தேவி, தமது கணவர் சிவபெருமான் என்று நினைத்து பிரம்மனின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். பின்னர், உண்மையை அறிந்து வருந்திய பார்வதி, பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருப்பதனால் தானே இந்த குழப்பம் என்று எண்ணி, சிவனை வணங்கி, பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்து விடுமாறு வேண்டினாள். அதை ஏற்று சிவனும் பிரம்மனின் ஒரு தலையை கொய்துவிட்டார். பிரம்மன், ஒரு பிராமணன் என்பதால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது. மேலும், நான்கு தலையுடன் இருந்த பிரம்மன், தன்னுடைய ஐந்தாவது தலை சிவனின் கைகளிலே ஒட்டி கொள்ளட்டும் என்றும், பரதேசி கோலத்தில் ஊர் ஊராக திரிந்து பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்றும் சாபம் அளித்தார். அந்த சாபத்தினால், சிவன் பரதேசி கோலத்தில் ஊர் ஊராக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து உண்டார். எனினும், அவருக்கு கிடைக்கும் பிச்சை உணவில் பாதியை, அவர் கையில் ஒட்டி இருந்த பிரம்மனின் தலையான கபாலம் உட்கொண்டுவிடும். இதனால் சிவன் கடும் பசியுடனும், கையில் ஒட்டி கொண்ட கபாலத்துடனும் ஊர் ஊராக சுடுகாடு முழுவதும் அலைந்து திரிந்து சாம்பலில் படுத்து உறங்கினார்.
பாவாடைராயன் தோற்றம்
அந்த கால கட்டத்தில், கல்விக்காடு என்ற க்ஷேத்ரத்தின் தலைவனாக இருந்தவன் பெத்தாண்டவன். பல இடங்களுக்கும் சென்று கொள்ளை அடித்து, குடிகளை சாய்த்து, அதன் மூலம் கிடைக்கும் பொருட்களை, தமது குடி மக்களுக்கு வழங்கி ஆட்சி புரிந்து வந்தான். எல்லா செல்வங்களையும் பெற்றிருந்த பெத்தாண்டவனுக்கு, தமது குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆகவே, அவனும் அவனது மனைவி பெத்தாண்டச்சியும், தங்களுக்கு குழந்தை வேண்டி தினமும் சிவனைப் பிரார்த்தித்து வந்தனர். அப்போது ஒரு நாள், பரதேசி கோலத்தில் திரிந்து கொண்டிருந்த சிவன், அவர்கள் வீட்டு வாசலில் நின்று பிச்சை வேண்டினார். வந்திருப்பவர் சிவன் என்று பெத்தாண்டச்சிக்கு தெரியவில்லை. ஆனாலும் பரதேசி வடிவத்தில் இருந்த சாமியார் முகத்தில் இருந்த சிவ கலையை கண்டாள். உடனே தங்கள் குலம் தழைக்க புத்திர பாக்கியம் வேண்டுமென அவரிடம் வேண்டினாள். அந்த வேண்டுதலுக்கு செவி சாய்த்து, விபூதியை பிரசாதமாக வழங்கிய சிவன், அதை உண்டால். உங்கள் குலம் தழைக்க ஒரு புத்திரன் பிறப்பான், அவனால் உங்கள் வம்சம் புகழ் அடையும், அவனும் உலகப்புகழ் பெற்றவனாக விளங்குவான் என்றும் ஆசீர்வதித்து சென்றார்.
சிவனின் வாக்குப்படி, சிறிது காலம் கழித்து பெத்தாண்டவன் - பெத்தாண்டச்சி தம்பதிக்கு அழகும், தேஜசும் நிறைந்த ஆண் புத்திரன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு தங்கள் ஊரை காப்பவன் என்று பொருள்படும், "கல்விகாத்தான்" என்ற பெயரை சூட்டி, பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.
அவனுடைய ஐந்தாவது வயதில், அவனுக்கு கல்வி,கலை,மற்றும் வீர விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அனைத்தும் அளிக்கப்பட்டது. அவன், அவை அனைத்திலும் ஆர்வத்துடன் கற்று தேர்ந்தான் . அவனுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன், அவனை அழைத்த தந்தை பெத்தாண்டவன், தமக்கு வயதாகிவிட்டதால், தம் மக்களை காப்பதற்காக, நீ நமது குலத்தொழிலை ஏற்றுகொள்ள வேண்டுமென பணித்தான். ஆனால், கொள்ளை அடிப்பது, குடிகளை சாய்ப்பது, உயிர்களை கொல்வது போன்ற பழி நேரும் தொழில்களை செய்வதற்கு கல்விகாத்தானுக்கு மனமில்லை. ஆனாலும், தந்தையை எதிர்த்துப்பேச முடியாமலும், அவருடைய ஆத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமலும், வேறு வழியின்றி அங்கிருந்து தப்பித்து கால் போன போக்கில் தலை தெறித்து ஓடினான்.
அங்காளியின் ஆணை
ஓடிக்கொண்டே இருந்தவன், தன்னுடைய எல்லைகளையெல்லாம் கடந்து அடர்ந்த வனப்பகுதிக்கு வந்துவிட்டான். சூரியன் மறைந்து, அப்பகுதி முழுவதும் இருள் ஆக்கிரமித்துவிட்டது. அது அம்மாவாசை இரவு என்பதாலும், காட்டு மிருகங்கள் எழுப்பிய சப்தத்தாலும் பயந்து நடுங்கி நின்றுகொண்டிருந்தான். என்ன செய்வது என்று தெரியாமல், அவன் தவித்த பொழுது, கண்ணை பறிக்கும் ஜோதி ஒன்று அங்கே தக தகவென ஜொலித்து கொண்டிருப்பதை அவன் கண்டான். பயத்தில் கொள்ளிவாய் பிசாசாக இருக்குமோ என அவன் அஞ்சி கூக்குரலிட்டான். உடனே, அங்கிருந்து ஒரு பெண் குரல் ஒலித்தது, மகனே! அஞ்சாதே! நான் தான் ஆதி சக்தியான அங்காளபரமேஸ்வரி! உனக்கு நான் துணை புரிவேன் என்றது. மேலும் இவ்வளவு காலமாக நான் இங்கே உனக்காகவே காத்து கொண்டிருந்தேன். உன்னால் எனக்கொரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது என்றும் சொன்னது.
அதாவது இன்று இரவு முடிவதற்குள், இங்கே எனக்கு நீ ஒரு ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சுத்த வீரனான உன்னால் மட்டுமே அது சாத்தியம் என்றாள் அங்காளபரமேஸ்வரி. உடனே அன்னையின் பாதங்களில் பணிந்து விழுந்த கல்விகாத்தான், தங்கள் ஆசியுடன் நான் அதை செய்தது முடிக்கிறேன் என்று உறுதி அளித்தான். அதன்படி, அன்னையின் ஆசியுடன் அந்த கடினமான பணியை தனது உயிரையும் பணயம் வைத்து செய்து முடித்தான் அதுவே மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயமாக திகழ்கிறது.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயம்
இதனால் உள்ளம் குளிர்ந்த அன்னை அங்காளபரமேஸ்வரி, அவனிடம் இன்னும் ஒரு சோதனை வைத்தாள். அதையும் ஏற்ற கல்விகாத்தான் தன்னுடைய குடலையும் உள்நாக்கையும் பிடுங்கி அன்னை தமது கரத்தால் தொட்டு வைத்த பாவாடையில் சமர்ப்பித்தான். மேலும் அகம் மகிழ்ந்த அன்னை, அவனை தனது மகனாக ஏற்று தூக்கி முத்தமிட்டாள். அப்பொழுது அவனுக்கு அன்னையின் ஆங்கார சக்தி உடல் முழுவது பரவி தெய்வ அம்சம் கிடைக்க பெற்றான்.
குலதெய்வமான பாவாடைராயன்
பாவாடைராயன். |
அன்னையின் ஆணையை ஏற்று, ஒரே இரவில் பல சோதனைகளை சந்தித்து கல்விகாத்தான் கட்டிய கோயிலே மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகும். ஆலயத்தை கட்டி முடித்து, உள்நாக்கையும், குடலையும் அறுத்து அம்மன் வைத்த பாவாடையில் சமர்ப்பித்ததால். அவனது வீரத்தையும் தியாகத்தையும் கண்டு அகமகிழ்ந்த அன்னை அவனை மகனாக ஏற்று முத்தமிட்டு ஆங்கார சக்தி வழங்கியதுடன், அவனுக்கு பாவாடைராயான் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தாள். மேலும் நான் குடிகொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் எனக்கு நீயே காவல் தெய்வமாக விளங்குவாய். என்னுடைய ஆலயத்தில் எல்லாம் உனக்கும் ஒரு சன்னதி இருக்கும். பக்தர்கள் உனக்கு ஆடு,கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு வழிபடுவார்கள். நீ பாமர மக்கள் பலருக்கு குல தெய்வமாக விளங்குவாய் என்றும் பாவாடைராயனுக்கு வரம் அளித்தாள்.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தமது மனைவியரான முத்துநாச்சியார் மற்றும் அரியநாச்சியார் அம்மனுடன் அன்னையை நோக்கி அருள்பாலிக்கிறார்.